கணவரின் தகாத உறவால் மனமுடைந்த பட்டதாரி பெண், ஓடும் ரயிலிருந்து குதித்து தற்கொலை செய்திக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் ஜீவிதா. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த தம்பதினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவர் ரோஸின் நடவடிக்கை ஜீவிதாவிற்கு சந்தேகத்தை வரவைத்துள்ளது. இந்நிலையில் ரோஸுக்கும் அவருடன் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரிய வர இது பற்றி கணவரிடம் கேட்டு சண்டைப் போட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரோஸ் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஜீவிதாவை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதனால், மனமுடைந்த ஜீவிதா தனது பெற்றோரிடம் இதுப் பற்றி கூறி முறையிட்டுள்ளார். பின்பு, இரு குடும்பத்தாரும் சேர்ந்து சமரசம் செய்து ஜீவிதாவை மீண்டும் ரோஸூடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவதன்று ஜீவிதாவிற்கு ரோஸூவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரோஸ், தனது மனைவியை தகாத வார்த்தைகள் பேசி அடித்துள்ளார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜீவிதா தனது தோழியின் வீட்டிற்குச் செல்ல கடந்த சனிக்கிழமை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்ல மின்சார ரயிலில் ஏறியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தம்பிக்கு போன் செய்து அழுதுள்ளார்.
பின்னர் ரயில் கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை தாண்டும்போது அடையாறு ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் இருந்து ஜீவிதா அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் அலறியுள்ளனர்.சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் ஜீவிதா ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி ஜீவிதாவின் உடலை மீட்டனர். இந்நிலையில், தனது மகளை அடித்து துன்புறுத்திய ரோஸ் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது ஜீவிதாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் ஜீவிதாவின் ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.