சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை மாற்ற திமுக முயற்சிப்பதாக கூறிய தமிழக ஆளுநர், மருது சகோதரர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை சாதி தலைவராக மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ” தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை யார் என்று தெரியுமா? அவர்தான் ராபர்ட் கால்டுவெல். ராபர்ட் கால்டுவெல்தான், திராவிடர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். உண்மையில் ராபர்ட் கால்டுவெல் யார் தெரியுமா? நான் இவர் போன்ற பல மனிதர்களின் பின்னணியை குறித்து லண்டனுக்கு சென்று படித்தேன்.
உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் இன்றளவும் கொண்டாடப்படும் சிலர், லண்டனுக்கு சென்று பிரிட்டிஷாரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சுதந்திரத்திற்காக போராடிய மருது சகோதர்களும், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர். காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத் சிங் ஆகியோர் இங்கே பிறந்து இருந்தால், அவர்களையும் சாதித் தலைவர்களாக பார்த்திருப்பார்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“