மார்க்சிஸ்ட் கம்யூன்ஸிட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் இன்று வியாழக்கிழமை மாலை மரணம் அடைந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.நன்மாறன் மூச்சு திணறல் காரணமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நன்மாறன் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
நன்மாறனுக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், குணசேகரன், ராஜசேகரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
களச்செயல்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். மேலும் மேடைக்கலைவாணர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர். 1971 முதல் தேர்தல் மேடைகளில் பேசி வந்த நன்மாறன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் சங்க நிகழ்ச்சிகளிலும் முதன்மை பேச்சாளாராக இருந்தவர்.
சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் சேவைக்காக சட்டமன்ற அலுவலகத்தை திறந்தே வைத்தவர் நன்மாறன். மேலும் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், கடைசி வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்.
எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த நன்மாறன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil