மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட வேண்டியது பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரிக்கு வருகை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்று பெறுவார்கள். புதுச்சேரியில் இரட்டை இஞ்சின் ஆட்சி என்று பிரதமர் சொல்வார். ஆனால் எந்த கோரிக்கையும் இங்கு நிறைவேற்றப்படவில்லை.
புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை திறப்போம் என முதலமைச்சர் கூறினார். பாஜகவினர் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்படும் என்றனர். ஆனால் திறக்கப்படவில்லை. அவர்கள் செய்தது தெருவுக்கு 4 ரெஸ்டோபார் திறந்தது தான். கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் தான் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியில் தற்போது பா.ஜ.க உலக மகா ஊழலை செய்துள்ளது.
பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் கொடுத்ததால் 38 கம்பெனிகளுக்கு 178 காண்ட்ராக்ட் கொடுத்துள்ளனர். மதுபான ஊழல் பொய் வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் சம்பந்தப்பட்ட மதுபான நிறுவன அதிபர் பா.ஜ.க.வுக்கு 59 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்துள்ளார். அப்படியானால் கைது செய்யப்பட வேண்டியது பா.ஜ.க தேசிய தலைவர் நாட்டா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தான் .
தென் மாநிலங்கள் மட்டுமில்லாமல் வட மாநிலங்களிலும் பா.ஜ.கவை வீழ்த்தி இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பா.ஜ.க அல்லாத அரசுகளை கவிழ்ப்பது நிர்வாகத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“