ஆளுனர் உரையை மஸ்கோத் அல்வாவுடன் ஒப்பிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியது ட்விட்டரில் செமையாக விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜனவரி 8) ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. இதையொட்டி ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை வாசித்தார். இந்த உரை குறித்து கருத்து கூறிய திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘ஆளுனர் உரையை வழக்கமாக மாநில அரசு தயாரித்து வழங்கும். ஆனால் இந்த உரையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பை பாராட்டியிருப்பதைப் பார்க்கையில், மத்திய அரசு தயாரித்த அறிக்கையோ என தோன்றுகிறது. மொத்தத்தில் ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா போன்று உள்ளது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக ஏமாற்றுவதை, ‘அல்வா கொடுத்துவிட்டார்கள்’ என கூறுவதுண்டு. அந்த வகையில் ஏமாற்றமான பட்ஜெட் என்பதையே, அல்வாவுக்கு பதில் மஸ்கோத் அல்வாவை உவமைப் படுத்தி வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
மஸ்கோத் அல்வா தயாரிப்பில் புகழ் பெற்ற ஏரியா, தூத்துக்குடி மாவட்டம் முதலூர். ஸ்டாலின் அடித்த கமெண்டால், ட்விட்டரில் மஸ்கோத் அல்வா டிரெண்ட் ஆகியிருக்கிறது. அதில் பலரும் ஸ்டாலினை கலாய்க்கிற விதமாகவே கமெண்ட்களை அள்ளி விட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.