/indian-express-tamil/media/media_files/2025/10/05/cuddalore-ganja-operation-2025-10-05-21-17-45.jpg)
கடலூரில் 'ஆபரேஷன் கஞ்சா': ஒரே நாளில் 42 கிலோ பறிமுதல்; ஒடிசா தலைவன் உட்பட 27 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்கும் விதமாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஜெயக்குமார் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், ஒரே நாளில் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முக்கியக் கடத்தல்காரர் உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி. ஜெயக்குமாரின் இந்தச் செயலால் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி, கடலூரில் உள்ளூர் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய வருவதாக எஸ்.பி. ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் கதிரவன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கடலூர் கஸ்டம்ஸ் ரோடு, வெளிச்சமண்டலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்குச் சந்தேகத்தின்பேரில் நின்றிருந்த நபர்களை வளைத்துப் பிடித்துச் சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக 22 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, தங்கபாண்டி (எ) எழுமலை, சிவா, தீனா, துளசிதாஸ், சதீஷ், தேவா, ஆகாஷ், நாராயணன், ரவி, கிருஷ்ணசாமி, கோகுலகிருஷ்ணன், அப்பு உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலின் தலைவனான பிரதாப் சுவைன் என்ற ஒடிசாவைச் சேர்ந்த நபர் தப்பி ஓடிவிட்டார். பின் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதேபோல், பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் நந்தகுமார், சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சிலம்பிநாதன்பேட்டை அருகே உள்ள முந்திரித் தோப்பில் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணித்தனர். அவர்களை வளைத்துப் பிடித்துச் சோதனை செய்தபோது 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இந்த 2-வது கும்பலில் ஒடிசாவை சேர்ந்த முக்கியக் கடத்தல்காரர் பிரதாப் சுவைன் (34), வைத்தீஸ்வரன், ராஜ்குமார், அருண் குமார், பாலச்சந்தர், ஸ்ரீநாத், ஷேக் (எ) ஜெயகணேஷ், ஜெயசூரியா, ஜானா, முகமது அசிம் பாஷா, சையத் முஸ்தபா, மாம்பலம் (எ) அசோக்ராமன், நித்தி (எ) மனோஜ்குமார், ராம்குமார், அங்கயம் (எ) ரத்தினவேல் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் 42 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார். இந்த அதிரடி நடவடிக்கையால், கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனைக் கும்பல்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.