தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை சி.எஸ். சேஷாத்ரி முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சி. எஸ். சேஷாத்ரி ஒரு இந்திய கணித மேதை ஆவார். இவர் அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வில் ஈடுபட்டவர். சென்னை கணிதவியல் கழகத்தின் இயக்குனராகவும் சென்னை கணிதவியல் கழகம் தொடங்கப்படுவதற்கு காரணமாகவும் இருந்தவர். இயற்கணித வடிவவியலில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுறத்தில் 1932ம் ஆண்டு பிறந்தவரான சி.எஸ்.சேஷாத்ரி செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள டாட்டா ஆய்வகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். பிரான்ஸில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பிராண்டிஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார்.
கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரியை பாராட்டி அமெரிக்கா மேத்தமெட்டிக்கல் சொசைட்டி, பாரீசின் யுனிவர்சிட்டி ஆப் பியரி, பத்மபூஷன், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது. இந்திய அறிவியல் அகாடமி சார்பில் ஸ்ரீனிவாச ராமானுஜம் விருது , பனாரஸ் இந்து பல்கலை சார்பில் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி முதுமை காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சி.எஸ்.சேஷாத்ரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பேராசிரியர் சி.எஸ்.சேஷாத்ரி காலமானதில், கணிதத்தில் சிறப்பான பணிகளைச் செய்த ஒரு அறிவார்ந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரது முயற்சிகள், குறிப்பாக இயற்கணித வடிவியலில், தலைமுறைகளுக்கு நினைவில் வைக்கப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி.” என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"