தம்பிரான் தொழு என்பது தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீநந்தகோபாலன் கோவிலில் அமைந்திருக்கும் தொழுவாகும். தேனி, கம்பம், கூடலூர், போடி, பெரியகுளம் என்று பசுமைய மாறாமல் செழிப்பாக இருக்கும் தமிழக மாவட்டங்களில் தேனியும் ஒன்று என்பதால் இங்கே கொண்டாடப்படும் பொங்கலும் சிறப்பு மிக்கதாகவே உள்ளது.
ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் தை 2ம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக இங்கே கொண்டாடப்படுகிறது. அக்கம் பக்கம் கிராமங்களில் இருந்து வண்டி கட்டி வரும் விவசாய பெருமக்கள் இந்த கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். தம்பிரான் தொழுவில் 400க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பாரம்பரியமாக மாட்டுப்பொங்கல் ஒரு சமூக விழாவாக எப்படி கொண்டாடப்பட்டது என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் எனில் அவர்கள் கட்டாயமாக தம்பிரான் தொழுவ மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியை நேரில் சென்று காண வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு எவ்வாறு அங்கே மாட்டுப்பொங்கல் நடத்தப்படும் என்பது பற்றி தெரியவில்லை. உங்களின் நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் அங்கே இருந்தால் அவர்களிடம் விசாரித்துவிட்டு தேனிக்கு செல்லவும்.
விவசாயிகள் தாங்கள் வேண்டியது நிகழ்ந்துவிட்டால் இங்கே நேர்த்திக் கடனாக மாடுகளை மாட்டுப்பொங்கலன்று விட்டுச் செல்வது வழக்கம். அதே போன்று தம்பிரான் தொழுவுக்கு தொப்புள் கொடி சுற்றிப் பிறந்த தலைச்சான் காளை கன்றுகளையும் மாட்டுப் பொங்கல் அன்று விவசாயிகள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த கோவிலில் பட்டத்துக் காளைகளை தேர்வு செய்வதும் வழக்கம். ஒரு முறை பட்டத்துக் காளை தேர்வு செய்யப்பட்டுவிட்டால் அந்த காளை கோவில் காளையாக இருக்கும். கோவிலில் இருக்கும் தொழுவம் திறக்கப்பட்டவுடன் அதில் இருக்கும் கன்றுகளில் எது முதலாவதாக அங்கே உள்ள செங்கரும்பு தட்டையை கடிக்கிறதோ அந்த கன்று பட்டத்துக் காளையாக தேர்வு செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil