மெரினாவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் நடத்தினர்.
மெரினாவில் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் தடையை மீறி மே மாதம் 3-வது வாரம் ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது அரசு.
எனினும் இந்த ஆண்டும் போலீஸ் தடையை மீறி இன்று (மே 20) மே 17 உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மெரினாவில் குவிந்தனர். மாலை 4.30 மணிக்கு மே 17 உள்ளிட்ட இயக்கத்தினர் கண்ணகி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதையொட்டி மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நேரம் செல்லச் செல்ல இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பெருமளவில் பல்வேறு இயக்கத்தினரும் திரண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். போராட்டக்காரர்களை மெரினாவில் நுழையவிடாமல் தடுத்து போலீஸார் கைது செய்தனர்.