Advertisment

மயிலாடுதுறை டூ அரியலூர்; சிக்காத சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, கடந்த 10 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை வைத்தும், தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடனும் சிறுத்தையை தீவிரமாகத் தேடிவந்தனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, கடந்த 10 நாட்களாக வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை வைத்தும், தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடனும் சிறுத்தையை தீவிரமாகத் தேடிவந்தனர்.

Advertisment

 மஞ்சலாறு, மகிமலையாறு, நண்டலாறு, வீரசோழனாறு மற்றும் பழைய காவிரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டது‌. அதனையடுத்து அந்தபகுதிகளில்  கூண்டுகள் வைக்கப்பட்டும் சிறுத்தை சிக்கவில்லை.

 இந்த நிலையில் சிறுத்தை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதிகளில் தென்பட்டதாக சிலர் கூறினர். அப்பகுதிகளிலும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் ஆனால், கடந்த இரண்டு நாட்களாக செலுத்திய காலடித்தடம் முன்னிட்டு எதுவும் சிக்காத நிலையில் சிறுத்தை, அரியலூர் மாவட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டது என்று கூறப்பட்டது. 

 மயிலாடுதுறையில் சுற்றித் திரிந்த சிறுத்தை, அரியலூா் மாவட்டம் பொன்பரப்பி, சித்தலவாடி பகுதியில் சுற்றி வருவதாக வியாழக்கிழமை தகவல் பரவியது. ஆனால் அரியலூர்  மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், பொன்பரப்பி, சித்தலவாடி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் சிறுத்தை நடமாடியதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் நேற்று இரவு  தெரிவித்தார்.

 இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. செந்துறை அரசு மருத்துவமனை அருகில் சாலையைக் கடந்து செல்லும் சிறுத்தை, அங்கு போடப்பட்டிருந்த கம்பி வேலியைத் தாண்டிச் செல்வது செந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ஆய்வு செய்த வனத்துறை சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

   இதையடுத்து ஒலிபெருக்கியின்‌ மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், கிராமமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர் வனத்துறையினர் மற்றும் போலீஸார். பின்னர் இதுகுறித்து, மயிலாடுதுறையில் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமாக சிறுத்தை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

   அரியலூர், செந்துறை அருகே சிறுத்தையின் நடமாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன், “அரியலூர், பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், அங்கு கால் தடயங்கள் தெளிவாகக் கிடைக்காத நிலையில், இரண்டு பிரிவாகப் பிரிந்து அருகில் உள்ள காடுகளில் தேடுதல் பணி மேற்கொண்டோம்.

   இந்த நிலையில், செந்துறை அரசு மருத்துவமனையில் 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டிப் போனதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில், வனத்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

   இதனையடுத்து, 11 மணி அளவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், அவரது வீட்டின் அருகில் சிறுத்தையைப் பார்த்ததாக கூறியுள்ளார். இதனால் வனத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் ஆகியோர் மூலம் சிறுத்தையை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

 இதனிடையே, மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை, தற்போது அரியலூர் பகுதியில் அன்றாடம் சிகிச்சைக்காக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் எனப் பலரும் வந்து செல்லக்கூடிய மருத்துவமனையின் அருகே சுற்றித்திரிவதால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக சிக்காமல் உள்ள சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தையை  பிடிப்பதற்காக மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்த  சிறப்புக் குழுவினர் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். முன்னதாக, மயிலாடுதுறை பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அவைகள் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பட்டு வருகிறது.

 இந்த சூழலில் இங்கிருந்து நெல் மூட்டைகளுடன் கிருஷ்ணகிரி சென்ற சரக்கு ரயில் மீண்டும் மயிலாடுதுறை திரும்பும் வேளையில், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் இருந்து சரக்கு ரயில் தவறுதலாக ஏறிய சிறுத்தையானது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இருக்கலாம் என பலரும் யூகிக்கின்றனர். குறிப்பாக முதல் முறையாக மயிலாடுதுறையில் சிறுத்தை தென்பட்ட இடமானது மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment