தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யிடம் டெல்லியில் மர்ம ஆசாமிகள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுரை காங்கிரஸ் எம்.பி சுதா டெல்லியில் காலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சக தி.மு.க எம்.பி.ராசாத்தி (சல்மா) சென்று கொண்டிருந்தார். அவர்கள் போலந்து தூதரகம் அருகே நடந்து சென்ற போது அவர்கள் எதிரில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் வந்தார். அந்த நபர் சுதா அருகில் வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சுதா அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத சுதா அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்தினார். அந்த வழியாக வந்த போலீஸ் கட்டுப்பாட்டு வாகனத்தில் இருந்த போலீஸாரிடம் இது குறித்து புகார் செய்தார். டெல்லியில் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இது குறித்து சுதா ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; ''நானும் சக தி.மு.க உறுப்பினர் ராசாத்தியும் காலை 6.20 மணிக்கு போலந்து நாட்டு தூதரகத்தின் மூன்றாவது கேட் அருகில் நடை பயிற்சிக்காக நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்நேரம் அந்த வழியாக எங்களுக்கு எதிரில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
அந்த நபர் ஸ்கூட்டியில் வந்தார். அவர் என் அருகில் வந்ததும் எனது கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அவன் எனது அருகில் வரும் வரை செயின் பறிப்பவன் என்று நினைக்கவே இல்லை. எனது செயினை பறித்ததில் எனது கழுத்தில் காயம் ஏற்பட்டுவிட்டது. எனது சுடிதார் கூட கிழிந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நான் கீழே விழவில்லை. நாங்கள் உதவி கேட்டு கத்தினோம். யாரும் வரவில்லை. பின்னர் நாங்கள் தமிழ்நாடு இல்லம் நோக்கி நடந்தோம். சிறிது தூரத்தில் போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று இருந்தது. அவர்களிடம் புகார் செய்தோம். ஆனால் அவர் விபரங்களை வாங்கிக் கொண்டு, காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சொன்னார். அதேநேரம் அந்த காவல் அதிகாரி உடனடியாக மற்ற இடங்களுக்கு தகவல் கொடுத்திருந்தால், திருடனை உடனடியாக பிடித்திருக்கலாம்.
காவல் அதிகாரி ரொம்ப சாதாரணமாக நடந்துக் கொண்டார். செயின் பறிகொடுத்ததை விட தலைநகரில் காவல்துறை அதிகாரிகள் நடந்துக் கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் நடந்ததை கூறினேன். அவர் பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
மிகவும் பாதுகாப்பு மிக்க சாணக்கியாபுரா பகுதியில் பெண் எம்.பி. ஒருவரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தியாவின் தலைநகரில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒரு பெண்ணால் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் பல தூதரகங்கள் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் உள்ளன. தனது செயினை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சுதா மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்