Advertisment

'மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை'- போர்க்கொடி தூக்கிய மயிலாடுதுறை காங்கிரஸார்

மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் மேலிடம் திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் இதனால் மயிலாடுதுறையை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் கட்சியின் வேறு தொகுதியை தனது கூட்டணிக்கு கொடுக்கவும் திமுக முயன்று வருவதாகக் கூறப்படுகின்றது.

author-image
WebDesk
New Update
Congress mayiladuthurai

Mayiladuthurai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் கட்டமைத்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

Advertisment

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விசிகவிற்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோக, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போதும், திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் இதே தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கரூர், திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, திமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதி மணியும், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசும், திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமாரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஆனால், தேர்தலுக்கு பிறகு இவர்கள் திமுகவினருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை எனவும், தொகுதியிலும் பெரியதாக பணி செய்யவில்லை என்பதால் பொதுமக்கள் இவர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், மேற்கண்ட மூவருமே உட்கட்சி பூசலில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜோதிமணி, திருநாவுக்கரசர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு பதிலாக, அந்த தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களை அறிவிக்க திமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அதேநேரம் மயிலாடுதுறை, கடலூர், தென்காசி மாற்று தொகுதிகளாக கொடுக்க திமுக சம்மதம் எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படி நடந்தால் திமுக வசம் உள்ள மயிலாடுதுறை எம்.பி.தொகுதி காங்கிரஸ்க்கு கொடுக்கப்படலாம். காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி தொகுதி கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு கொடுக்கப்படலாம் என்ற பேச்சும், அதேநேரம் திருச்சியை காங்கிரஸ் கட்சி தனக்கே வேண்டும் எனக்கேட்டு பெரும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசருக்கு பதிலாக மாற்று வேட்பாளரை காங்கிரஸ் கட்சி களமிறக்க வேண்டும் என்பதில் அறிவாலய வட்டாரம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், திமுக வசம் இருக்கும் மயிலாடுதுறை தொகுதியில் 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுகவை சேர்ந்த சுப்ரவேலு எம்.பியாக இருந்தார். கடந்த 1984, 1989, 1991 ஆகிய 3 நாடாளுமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக தோல்வியை தழுவியது. அதன்பின்பு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே மயிலாடுதுறை தொகுதியை திமுக ஒதுக்கி வந்தது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக நேரடியாக களமிறங்கி, 28 ஆண்டுகளுக்கு பிறகு 2019 தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வசமானது.

இதனை தக்க வைத்துக்கொள்ள திமுகவினர் நினைத்திருக்கும் நிலையில் மயிலாடுதுறை தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் மேலிடம் திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் இதனால் மயிலாடுதுறையை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் கட்சியின் வேறு தொகுதியை தனது கூட்டணிக்கு கொடுக்கவும் திமுக முயன்று வருவதாகக் கூறப்படுகின்றது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு வழங்கும் பட்சத்தில் அதன் வேட்பாளராக பிரவின் சக்கரவர்த்தி களம் இறங்குவார் என்று காங்கிரஸார் தரப்பில் வலுவாக பேசப்படுகிறது. ‍

ஏற்கனவே பட்டுக்கோட்டை ராஜேந்திரன் என்பவர் தமக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென அறிக்கை விட்டிருந்தார். தற்பொழுது முன்னாள் மயிலாடுதுறை நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தொகுதி‍‍‍‍ மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க வேண்டும்.

மயிலாடுதுறைக்கு சம்மந்தமில்லாத நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே தொகுதிக்கு சம்மந்தமில்லாத மணி சங்கர் அய்யருக்கு பலமுறை வேலை பார்த்து ஜெயிக்க வைத்தோம், ஆனால் அவர் தொகுதி காங்கிரஸ் கட்சியினருக்கு பெரியளவில் ஏதும் செய்யவில்லை. அவருக்கு உதவியாளராக ஒருவரை நியமித்து டெல்லிக்கு சென்றார். அவரது உதவியாளராக இருந்த ராஜ்குமார் இப்போது எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார்.

ஆகையால் மயிலாடுதுறை தொகுதிக்கு சம்மந்தமிருப்பவர்களை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேநேரம், திருச்சியில் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.பி., திருநாவுக்கரசர் மீது தொகுதியில் அதிருப்தி நிலவுவதால் அந்த இடத்தை மதிமுகவுக்கு வழங்கலாம் என்றும் அப்படி வழங்கும் பட்சத்தில் மயிலாடுதுறையை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம் எனவும் அறிவாலய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் அந்த இடத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகின்றது. இதனால் திருநாவுக்கரசரை சமாளிக்க மயிலாடுதுறையில் அவரை வேட்பாளராக்கலாமா என்ற ஆலோசனையிலும் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டு வருகின்றது.

இந்த ஆலோசனையால் தான் மயிலாடுதுறை தொகுதியை தொகுதிக்கு சம்மந்தமில்லாத யாருக்கு கொடுக்க வேண்டாம் மண்ணின் மைந்தர்களுக்கே இந்த முறை முன்னுரிமை வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் மயிலாடுதுறை காங்கிரஸார்.

மேலும், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறை வெற்றி வாய்ப்பினை பெற்றிருப்பதால் இந்த தேர்தலில் மயிலாடுதுறையை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தலைமையிடம் காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவோடு பிரவின் சக்கரவர்த்தி களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தமிழகத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு மாயூரம் தொகுதி என்று அழைக்கப்பட்டு இரட்டை உறுப்பினர் முறையில் இருந்து தொடங்கி, அதன்பின்பு மயிலாடுதுறை தொகுதியாக மறுவியது. அப்போது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளைக் கொண்டதாக இருந்த மயிலாடுதுறை தொகுதியில் கடந்த 2009-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது குத்தாலம் சட்டசபை தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பாபநாசம் சட்டசபை தொகுதி மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் இதுவரை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mayiladuthurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment