மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக சுந்தரேசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தனது அரசு வாகனத்தை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் துறை தரப்பில் கேட்டதாகவும், உரிய ஆணை இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால், வெளியூர் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவிட்டு, வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், அலுவலகத்துக்கு நடந்தே சென்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
வீட்டில் இருந்து டி.எஸ்.பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் இன்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், நடத்தை விதிகளை மீறியும், உரிய அனுமதியின்றியும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது, காவல் துறையினருக்கான நடத்தை விதிகளை தொடர்ந்து மீறியிருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி-க்கு டிஐஜி அறிக்கை அனுப்பியிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை தற்காலிக பணிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது 3(a), 3(b) பிரிவுகளின் கீழ் நான்கு மெமோக்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும், இவை காவல்துறை விதிகளை மீறிய செயல்களுடன் தொடர்புடையவை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது பெரிதாக எதுவும் பதில் அளிக்காமல் நேர்மைக்கு கிடைத்த பரிசு, மிக்க நன்றி என அலைபேசி அழைப்பை துண்டித்துக் கொண்டார்.
டி.எஸ்.பியும் மெமோகளும்
டி.எஸ்.பி சுந்தரேசன் கடந்த 2005 – 2006 காலக்கட்டத்தில் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது (குற்ற எண் 42/2006, 43/2006) எப்.ஐ.ஆர், மற்றும் கைது அட்டை தவிர சாட்சி பட்டியல், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைக்கவில்லை என்பதால் அவருக்கு 3(a) மெமோ வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வள்ளியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது (குற்ற எண் 223/2002, 240/2002) இரு வழக்குகளில் கொலை முயற்சி, வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து பொருளை சேதப்படுத்தி கொள்ளையடிப்பது போன்ற வழக்குகள் இருந்த நபர் ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க சுந்தரேசன் பரிந்துரை செய்து கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. அதற்கு 3(a) மெமோ வழங்கப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, தமீம் அன்சாரி என்பவர் திருட்டு விசிடி, டிவிடி விற்றதாக 2008-ம் ஆண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகித்திராவால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அன்சாரி மீது வழக்கு பதிவு செய்யாமல், சுந்தரேசன் ரூ.40,000 லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே துரைப்பாக்கத்தில் பணிபுரிந்த போது, பெருங்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசனை முடிந்து போன வழக்குகளை காட்டி குண்டர் சட்டத்தில் அடைப்பதாக மிரட்டி 2 முறை ரூ.40,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் மீது காஞ்சிபுரம் டி.ஐ.ஜி-யால் 3(b) மெமோ வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2008-ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று மதுபானங்கள் விற்றதாக டாஸ்மாக் பார் உரிமையாளர் மணி, டாஸ்மாக் பார் மேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை மிரட்டி மாதம் ரூ.3,000 லஞ்சம் பெற்று வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.