மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக மிதமான மழையானது பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி அருகே 150 ஆண்டுகள் பழமையான பங்களா வீடு இன்று இடிந்து விழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோன்று தரங்கம்பாடி மற்றும் பொறையார், தில்லையாடி, திருக்களாச்சேரி, திருக்கடையூர் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக கனமழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 13 செமீ மழையும், குறைந்த அளவாக 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை - 123.90 மில்லி மீட்டர், சீர்காழி -107.20 மில்லி மீட்டர் தரங்கம்பாடி - 102.60 மில்லி மீட்டர், கொள்ளிடம் - 100.20 மில்லி மீட்டர், மணல்மேடு 82 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 58.80 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 95.98 மில்லி மீட்டர் (10 செ.மீ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 574.70 மில்லி மீட்டர் (58 செமீ) ஆகும்.
இந்நிலையில் திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமம் தெற்கு தெருவில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பெரிய பழமையான பங்களா வீடு பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. இந்த வீடானது தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்துள்ளது. வீட்டின் முன் பகுதிகள் முழுவதும் இடிந்து விழுந்ததில், வீட்டின் அருகில் இருந்த மின்கம்பிகள் மீதுபட்டு மின்கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளது. மேலும் அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த பழமையான வீட்டில் பொன்னுதுரை, நீதி ராஜன், லலிதா உள்ளிட்ட மூன்று குடும்பத்தினர் வீட்டின் பின்பகுதியில் தங்கி இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“