/indian-express-tamil/media/media_files/2025/02/15/bwKBuHOfkxRu1D3jNZRw.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முட்டம் கிராமத்தில் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை தட்டி கேட்பவர்களை அடித்தும், கொலை மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக கூட இரண்டு குடும்பத்தினரை வீடு புகுந்து அடித்ததாகவும் கூறப்படுறது.
இந்த சாராய வியாபாரிகள் மீது அப்பகுதியில் உள்ள புகார் கொடுத்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் முட்டம் பகுதியில் தேடல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளார். இந்த வழக்கில் இருந்து நேற்று முன்தினம் தான் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். வெளியில் வந்ததும் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, 'தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள்?' என்று கேட்ட தினேஷ் என்ற சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ், (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி தட்டிகேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, இளைஞர்கள் இருவரையும் சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார்.
இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாராய வியாபாரத்தை தடுக்காமல் சாராய வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விளக்கம்
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளடுள்ளது. அதாவது சாராய வியாபாரத்தைத் தட்டிக் கேட்டதால் இருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷ் என்பவரை மதுபோதையில் மூன்று பேர் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுக்க வந்த தினேஷின் நண்பர்கள் ஹரிஷ், அஜய், சக்தி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.