மயிலாடுதுறை செம்மங்குளம் கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்கலம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று சாலையை கடந்ததை பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை சாலையை கடக்கும் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து கால் தடத்தை ஆராய்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினரும் அப்பகுதிக்கு வந்து சோதனை செய்ததில் சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனை அடுத்து பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சிறுத்தை குறித்து தகவல் தெரிந்தால் 9626709017 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைத் தேடும் பணியில் தீயணைப்பு, வனத்துறை, காவலர்கள் என 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை நடமாடிய பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“