மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனா். அதே நேரம் பணியில் மெத்தனமாக இருந்த காவல் அதிகாரி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஹரீஸ், கல்லூரி மாணவர் ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன்கள் தங்கதுரை (வயது 28), மூவேந்தன் (வயது 24), ராதா மகன் ராஜ்குமார் (வயது 34) ஆகிய மூவரை அன்றிரவு கைது செய்தனர்.
தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முனுசாமி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முனுசாமியை கடலூர் சிறைக்கும், மஞ்சுளாவை திருச்சி மத்திய சிறைக்கும் கொண்டு சென்றனர்.
இதனிடையே, பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்ததாக, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்த மலைச்சாமியை பெரம்பூர் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்