நாடு முழுவதும் கடந்த நவ.12-ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் சாதி, மத பேதங்களை கடந்து கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடிய மயிலம் தீபாவளி களை கட்டியது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் வடசித்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்று கூடி மயிலம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வடசித்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மயிலம் தீபாவளி கொண்டாட்டத்தில் உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராட்சத ராட்டினம், ஊஞ்சல், குழந்தைகள் விளையாட்டு உபகரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடி உற்சாகமடைந்தனர். வடசித்தூர் கிராமத்தைச் சுற்றி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் பல்வேறு சமூகத்தினரும் வசித்து வந்தாலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மயிலம் தீபாவளியன்று அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி இப்பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இந்துக்களின் வீடுகளுக்கு இஸ்லாமியர் வருகை தந்து அன்றைய தினம் உணவருந்தி செல்வது வழக்கம். குறிப்பாக இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு கமிட்டி அமைப்பது தலைமையோ இல்லாமல் அன்பாக சேரும் கூட்டம் என்றும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த உறவுகளையும் ஒன்று சேர்க்கும் திருவிழாவாக இந்த மயிலம் தீபாவளி விளங்குகிறது என பெருமித்துடன் தெரிவித்த கிராம மக்கள், இன்றைய தலைமுறையினர் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுவதாக தெரிவித்தனர்.
வடசித்தூர் கிராமத்தில் கொண்டாடப்படும் மயிலம் தீபாவளியால் அந்த கிராமமே களை கட்டியது என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“