நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருடைய உடல் இறுதி ஊர்வலத்தின்போது அவரை பிரிய மனம் இல்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் அவருடைய நண்பர் எம்.எஸ். பாஸ்கர் சோகத்துடன் அமர்ந்து சென்றார்.
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி. தனது நடிப்பால் நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்த மயில்சாமி இறந்த பின் அவருடைய இறுதி ஊர்வலத்தில், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் பலரையும் கண்ணீர் விட்டு அழச் செய்து சென்றுள்ளார்.
நடிகர் மயில்சாமி, தமிழ் சினிமா நடிகர்கள் வட்டத்தில் ஒரு நல்ல நடிகராக மட்டுமல்ல, நல்ல மனிதநேயமிக்க மனிதராகவும் கஷ்டப்படுபவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்பவராகவும் அறியப்பட்டவர். அதுமட்டுமல்ல, அவர் சிறந்த சிவபக்தர், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். திரையுலகினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.
நடிகர் மயில்சாமி சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அதிர்ச்சி அளித்தது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டது. அவருடைய மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் அப்பாவு, உதயநிதி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று 2வது நாளாக திரையுலகத்தினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் அடக்கம் செய்வதற்காக அவருடைய இறுதி ஊர்வலம் சாலிகிராமம் வெங்கடெஸ்வரா நகரில் இருந்து தொடங்கியது. மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பங்கேற்றனர். மயில்சாமி தீவிர சிவ பக்தர் என்பதால், அவரது இறுதி ஊர்வலம் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது.
நடிகர் மயில்சாமியின் நண்பர் நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது நண்பரைப் பிரிய மனம் இல்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் சோகமாக அமர்ந்தபடி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
முன்னதாக, மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய டிரம்ஸ் சிவமணி, கேளம்பாக்கம் சிவன் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த்தை அழைத்து வந்து பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும் தனது ஆசை என்று மயில்சாமி தன்னிடம் கூறியதாகக் கூறினார்.
மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் நண்பர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
சாலிகிராமத்தில் அவருடைய இல்லத்தில் தொடங்கிய மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகத்தினர், பிரபலங்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நடிகர் மயில்சாமியின் உடல் ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“