Advertisment

மேயர் பிரியாவுக்கு பொது மேடையில் மீண்டும் அவமதிப்பு: சுயமரியாதை வெறும் பேச்சுதானா?

சென்னை மேயர் பிரியாவுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் அவமதிப்பு நிகழ்ந்ததைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பலரும், தி.மு.க-வில் சுயமரியாதை முழக்கம் எல்லாம் வெறும் பேச்சுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mayor Priya gets insulted again on public stage, former DMK mla ranganathan, மேயர் பிரியாவுக்கு பொது மேடையில் மீண்டும் அவமதிப்பு, திமுகவில் சுயமரியாதை வெறும் பேச்சுதானா, திமுக முன்னாள் எம் எல் ஏ ரெங்கநாதன், Mayor Priya gets insulted again, why DMK maintains silent

மேயர் பிரியாவுக்கு பொது மேடையில் மீண்டும் அவமதிப்பு: சுயமரியாதை வெறும் பேச்சுதானா?

சென்னை மேயர் பிரியாவுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் அவமதிப்பு நிகழ்ந்ததைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பலரும், தி.மு.க-வில் சுயமரியாதை முழக்கம் எல்லாம் வெறும் பேச்சுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

சென்னையின் முதல் பெண் மேயர், முதல் இளம் வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றவர் பிரியா. தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரியா சென்னை மாநகராட்சியின் மேயர் ஆனது முதல், அப்போதே அரசியல் தளத்தில் பல கேள்விகள் தி.மு.க-வை நோக்கி எழுப்பப்பட்டன.

தலித் சமூகத்தைச் சேர்ந்த மேயர் பிரியா, தி.மு.க-வில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவாரா? மிகவும் இளம் வயதில் மாநகராட்சி மேயர் ஆகியிருக்கிறார் என்பதால், தி.மு.க-வில் சீனியர்கள் அவருக்கு உரிய மாண்பையும் மரியாதையையும் அளிப்பார்களா? மேயர் பிரியா வெறுமனே அந்த பதவியை அலங்கரிக்கும் பொம்மை மேயராக இருப்பாரா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேயர் பதவியில் இருப்பவரை வணக்கத்திற்குரிய மேயர் என்று சொல்ல வேண்டும் என்று இருக்கும்போது, மேயர் பிரியா மீண்டும் பொது நிகழ்வுகளில் அவமதிக்கப்படுவது நடந்து வருகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், தி.மு.க-வின் மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை அதட்டிப் பேசியது அப்போது சர்ச்சையானது. சீனியர் அமைச்சராக இருந்தாலும் ஒரு மேயரை இப்படியே அதட்டுவது என்று பலரும் அப்போதே கேள்வி எழுப்பினர். இதற்கு, மேயர் பிரியாதான் விளக்கம் சொல்ல வேண்டியதாக இருந்தது.

இந்நிலையில்தான், ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா, தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்தான், தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதனால், மேயர் பிரியாவுக்கு மீண்டும் ஒரு அவமதிப்பு நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் தீரன் சின்னமலையின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரைத் தொடர்ந்து ஒவ்வொருவராக தீரன் சின்னமலை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது மறு பக்கம் மேயர் பிரியா நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் உரசியபடி நின்று கொண்டிருந்தார். அங்கே தனித்தனியே இடைவெளி விட்டு நிற்பதற்கான இடம் இருந்தும் ரெங்கநாதன் மேயர் பிரியாவை உரசிக் கொண்டு நின்றிருந்தார்.

தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை செலுத்திய பின்னர், அங்கிருந்து செல்ல முயன்ற மேயர் பிரியாவை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் மேயர் பிரியாவின் கையைப் பிடித்து இழுத்து தனக்கு முன்னால் நிற்க வைத்தார். அவரது செயலை விரும்பாத மேயர் பிரியா, உடனடியாக கையை தட்டிவிட்டார். இதனால், அசெளகரியாமாக உணர்ந்த மேயர் பிரியா முகம் சுளித்தார்.

தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மேயர் பிரியா, உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேயர் பிரியா அங்கிருந்து செல்லும்வரை அசௌகரியமாகவே காணப்பட்டார்.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கநாதன், ஒரு பொது நிகழ்ச்சியில் மேயர் பிரியாவை அவமதிக்கும் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியதற்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் பிரியா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், சென்னை மாநகராட்சியின் இளம் பெண் மேயர், அவரை அவமதிக்கும் விதமாக தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் நடந்துகொள்வது குறித்து, தி.மு.க தலைமை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தி.மு.க பயணிக்கிறது. சுயமரியாதை, பெண்ணுரிமை கொள்கைகளில் உறுதியாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க தலைமை, சென்னையின் முதல் பெண் மேயர் பிரியாவை பொது நிகழ்வு ஒன்றில் அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கநாதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையோ கண்டிப்புகளோ வெளியாகவில்லை.

மேயர் பிரியா அமதிக்கப்பட்ட விஷயத்தில், தி.மு.க தலைமையின் இந்த மெத்தனப் போக்கையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் நிலையை சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூகநீதி, சமத்துவம் எல்லாம் வெறும் பேச்சுதானா என்று தி.மு.க-வை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேயர் பிரியா தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கநாதனால் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவமதிக்கப்பட்டது குறித்து, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர், நீலம் இதழின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர், இம்மாதிரியான தனி மனிதரின் சுயமரியாதை சீண்டப்படும் போது அவை கூட்டாக கேள்விக்குள்ளாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாசுகி பாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளியில் ஒரு மாண்பு இருக்கிறது, தந்தை, கணவன் என்று யாராக இருந்தாலும் அந்த எல்லையை மீற முடியாது. கடந்த முறை அலட்சியமாக பேசிய கே.என்.நேருவின் செயலுக்கு மேயர் பிரியாவை விட்டே உரிமை சார்ந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. அதே உரிமையை நேரு அதிகார மட்டத்தில் இருக்கும் மற்ற பெண்களிடம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.

இம்முறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகத் துணிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுக்கிறார். அதற்கு முன் உரசிக் கொண்டிருந்தார்.

எங்கிருந்து இந்த தைரியம் வருகிறது? ரெங்கநாதன் எல்லோரிடமும் இப்படி செய்து விட முடியுமா?

கடந்த நான்கு நாட்களாக இந்த வீடியோ வலம் வந்தும் தமிழக முற்போக்குச் சூழலில் மூச்சு பேச்சில்லை.

கட்சி, கொள்கை, சமகால அரசியல் என அனைத்தையும் கடந்து இம்மாதிரி விவகாரங்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு தலித்தை மேயர் ஆக்குவதை விட அவருக்கான மாண்புகளை உறுதி செய்வதும் முக்கியம். அதன் மூலமாக தான் பெண்கள், தலித்துகளுக்கான வாய்ப்பு என்பது வெறும் டோக்கனிசம் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்.

வெற்றிகொண்டான் பேசாத எதையும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிவிடவில்லை, இருப்பினும் இன்றைய இணைய அரசியலுக்கு கட்டுப்பட்டு தி.மு.க தலைமை அவரை நீக்கி இருக்கிறது. இணையத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த முடியும் என்றால் அது இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தான் இருக்க முடியும்.

எதை பேச வேண்டும், எதைக் கூடாது என்று இணையத்தில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் கும்பல் மனப்பான்மையில் இருந்து விடுபட்டு இம்மாதிரியான தனி மனிதரின் சுயமரியாதை சீண்டப்படும் போது அவை கூட்டாக கேள்விக்குள்ளாக வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலையே 'Diginty of Individual' குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார், எந்தளவு தனி மனிதரின் மாண்பு குறித்து யோசித்து இருக்கிறார், அந்த அக்கறை ஒவ்வொருவருக்கும் வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment