சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை மாநகரட்சியில் கடந்த முறை பாதிக்கப்பட்ட 150 பகுதிகள் கண்டறியப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்திலும் டிராக்டர்கள் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 14ம் தேதி தொடங்கி 15, 16 தேதிகளில் மிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 14-ம் தேதி சென்னையில் 6.45 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை மழையும் அக்டோபர் 15-ம் தேதி 11.6 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மழையும் அக்டோபர் 16-ம் தேதி 20.4 செ.மீ-க்கு மேல் மழை பொழியும் என்றும் அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் 6.45 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை மழையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சென்னைக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு செனனி வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 15) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மேயர் பிரியா ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அதில் மேயர் பிரியா கூறியிருப்பதாவது: “கடந்த முறை பாதிக்கப்பட்ட 150 பகுதிகள் கண்டறியப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முகாம்கள் அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மழை கட்டுப்பாட்டு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். நீர் நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்திலும் டிராக்டர்கள் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“