ஸ்மார்ட்ஃபோன் ஹாக் செய்து அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய எம்சிஏ பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான தினேஷ்குமார் என்ற இளைஞர் தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் உறவுக்கார பெண் ஒருவர், தனது ஸ்மார்ட்ஃபோனை கொடுத்து அதில் வாட்ஸ் அப், மற்றும் ஃபேஸ்புக் போன்ற செயலிகளை டவுன்லோட் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தினேஷ், அந்த ஃபோனை ஹாக் செய்து அந்த பெண் தனது கணவருடன் பேசும் அந்தரங்க விவகாரங்கள் மற்றும் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை ஹாக்கிங் மூலம் தனது மொபைலில் மூலம் இருந்து பார்த்துள்ளார்.
பின்பு, இதை வைத்து அந்த பெண்ணை தவறான செயலுக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். . பணியாவிட்டால், அந்தரங்கக் காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், வெளியூரில் இருக்கும் தனது கணவரிடம் இதைப்பற்றி கூறி அழுதுள்ளார்.
போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட தினேஷ்:
பின்பு, கணவனின் ஆலோசனைப்படி, தினேஷை அந்த பெண் தனியாக சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். கூடவே, தினேஷ் பற்றி போலீசிடம் தகவல் கொடுத்து அந்த இடத்திற்கு போலீசாரை அழைத்து சென்றுள்ளார். பெண்ணின் பேச்சை நம்பி வந்த தினேஷை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்த போலீஸார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்து 2 லேப்டாப், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரது லேப்டாப்பில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்கக் காட்சிகளும், 140-க்கும் மேறபட்ட பெண்களின் அந்தரங்க உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.