தான் அச்சடித்த 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த பெண் தற்போது போலீஸிடம் சிக்கியுள்ளார்.
கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரைகேட்டுள்ளார் ஒரு பெண். அந்தக் கடையில், சில்லரை இல்லை என்று சொல்லவே பக்கத்து கடைக்கார பெண்மணியை அணுகியிருக்கிறார்.
நோட்டை வாங்கிப் பார்த்த தமிழரசி என்ற பழ வியாபாரி, சந்தேகத்துடன் தன்னிடம் சில்லரை என்றிருக்கிறார். ஆனால் தனக்கு தெரிந்தவரிடம் வாங்கித் தருவதாக சொல்லி, அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
2000 ரூபாயை வாங்கிப் பார்த்து கள்ள நோட்டு என்பதை போலீஸார் உறுதி செய்துவிட்டதை உணர்ந்த அந்த பெண் மாயமானார். தீவிர தேடுதலில் அவரை பண்ருட்டி செல்லும் பேருந்தில் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.
உடனே அந்தப் பெண்ணைப் பிடித்து, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் போலீஸார்.
அவர் பெயர், பரணிகுமாரி வயது 35 என்பதும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ படித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தவிர, 70,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் யூ-டியூப் மூலம் தெரிந்துக் கொண்டு கள்ளநோட்டை அடித்ததாகக் கூறிய பரணிகுமாரி, அச்சடித்த கள்ளநோட்டை கடலூர் பஸ் நிலையத்தில் புழக்கத்தில் விடும்போது மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதோடு இதற்கான ஜெராக்ஸ் மிஷின் பேப்பர், கத்தரிக்கோல் ஆகியவற்றையும் யூ-ட்யூபின் உதவியோடு தான் வாங்கியதாகவும் ஒத்துக் கொண்டார். இதனை பறிமுதல் செய்த போலீஸார் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.