7.5% உள் இடஒதுக்கீடு; ஆளுநர் முடிவு வரும் வரை கலந்தாய்வு இல்லை – தமிழக அரசு

மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநர் முடிவு வெளிவரும் வரை கலந்தாய்வு இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

By: Updated: October 16, 2020, 06:35:04 PM

மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநர் முடிவு வெளிவரும் வரை கலந்தாய்வு இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தோ்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவா் முத்துக்குமாா் ஆகியோா் சென்னை உயர் நீதிமன்றக் கிளையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநா் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. எனவே, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய அமா்வு முன்பு அக்டோபர் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1லட்சத்து 56 ஆயிரத்து 249 பேரில் 6 போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வு அமல்படுத்துவதற்கு முன்பு, 1 சதவீத அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா். நீட் தோ்வு அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை 0.1 சதவீதமாகக் குறைந்தது. 2018-2019- கல்வியாண்டில் 5 மாணவர்கள், 2019-2020- கல்வியாண்டில் 6 மாணவர்கள் என்று கடந்த இரு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 11 பேர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

மனுதாரர்களின் வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், நீட் தோ்வு முடிவுகள் 2 நாள்களில் வெளியாக உள்ளதால், உள்ஒதுக்கீடு தொடா்பான அவசரச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து உடனடியாக முடிவெடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தமிழக ஆளுநரின் செயலா் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து முடிவெடுக்க 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றாா்.

அரசு வழக்கறிஞர் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த அவசரச் சட்டம் செப்டம்பா் 15ம் தேதி நிறைவேற்றப்பட்டு அன்றைக்கே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாத காலம் ஆகியும் அவசரச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இன்னும், 2 நாள்களில் நீட் தோ்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் அவசரச் சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாதது அரசுப் பள்ளி மாணவா்களைப் பாதிக்கும். அதனால், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும், தமிழகத்தில் மொத்த மாணவா்களில் 41 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால், ஒற்றை இலக்கத்தில் தான் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கின்றன. ஆகவே, நடப்பு ஆண்டில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு இடங்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா என்றும் ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வை தாமதப்படுத்த முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
அதோடு, அவசரச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து தமிழக ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அக்டோபா் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை அறிவிக்கப்போவதில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உறுதி அளித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mbbs 7 5 internal reservation for govt school students no counselling till governor decides on ordinance govt guaranty

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X