எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை : நாளை ஐகோர்ட்டில் விசாரணை

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக, தமிழக அரசின் மேல் முறையீடு மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ் படிப்பில் மாநில வழி பாடதிட்டத்தில படித்த மாணவர்களுக்கான 85% ஒதுக்கீட்டு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனு, மாணவர்களின் கேவியட் மற்றும் இணை மனுக்களை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் 85% மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் ( ஜூன் ) 22 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அதில்,

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கான அதிகாரத்தை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
அனைவருக்குமான சம உரிமையை மறுக்கக்கூடாது என்ற Article 14 (right to equality) என்பது மீறப்பட்டிருப்பதாக தனி நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவறு என்றும் எந்த இடத்திலும் அது மீறப்படவில்லை, மாறாக மாநிலத்துக்கான தேவைகளை பார்க்க வேண்டியது உள்ளது.

மேலும் சி.பி.எஸ்.இ பாடத்துக்கும் மாநில வழி பாடதிட்டத்துக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டு பாடதிட்டத்தையும் சம்மாக கருத முடியாது. அதே போல் நீட் தேர்வின்போது 50% வினாக்கள் சி.பி.எஸ்.இ பாட திட்டத்திலிருந்து கேட்கப்பட்டது. மேலும் நீட் தேர்வில் முதல் 300 இடங்களை பெற்ற மாணவர்களில் 72 சதவிகிதம் பேர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டதில் படித்த மாணவர்கள் ஆவர். எனவே மாநில வழி பாடதிட்டத்தில் படித்த மாணவர்களையும் சி.பி.எஸ்.இ மாணவர்களையும் சம்மாக கருத முடியாது. அதனை கருத்தில் கொண்டே மாநில பாடதிட்டத்தின் வழியே படித்த 4.20 லட்சம் மாணவர்களுக்காக 85% உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. மேலும் அனைத்து தரப்பு அதிகாரிகளின் கலந்தாலோசனைக்கு பின்னரே அரசாணை மாநில அரசின் கொள்கை முடிவாக
வெளியிடப்பட்டது.

மேலும் இதை சட்டமாக்கி அதை செயல்படுத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. மருத்துவ படிப்பில் ஏழை மாணவர்கள் ஆண்டுக்கு 10ஆயிரம் கட்டணமாக கட்டி படிக்கும் வாய்ப்பு பறி போய் உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் நலனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிபதி தீர்ப்பில் எந்த இடத்திலும் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறவில்லை. நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மாநில தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு ஆக ( மாநில வழி பாடதிட்டம், பிற பாட திட்டம்) பிரித்து மாணவர் சேர்க்கை நடத்தவே 85% ஒதுக்கீடு என்று வழி வகை செய்யப்பட்டது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என சி.பி.எஸ்.இ மாணவர்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என கோரி மாநில பாடத்திட்டத்தின் வழியில் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராம்மோகன்ராவ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் தங்கள் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை. எனவே தங்கள் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து நீதிபதிகள், எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தொடர்பாக உள்ள அனைத்து மனுக்களையும் தங்கள் அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் முழுமையான விசாரணையை மேற்கொள்வதற்காக இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தனர்.

×Close
×Close