இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க இசைவு கொடுத்துள்ளது. இந்த முடிவு, மருத்துவ கவுன்சிலின் அதிகாரமளித்தல் குழு, இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆறு கல்லூரிகள் நிறுவப்பட்டால் 2020 ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 900 எம்பிபிஎஸ் சேர்க்கைகள் கூடுதலாக நடத்தப்படும். இதனால், அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நமக்கல் ஆகிய இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் வருவதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மேலும், ராஜா முத்தியா மருத்துவக் கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் மற்றும் ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் மூன்று வகை பி பிரிவு மருத்துவக்கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் படிக்க சீனாவிற்கு ஏன் அதிகளவில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர் :
இந்திய மருத்துவ கவுன்சில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 57, 000 க்கு மேற்பட்ட அல்லோபதி மருத்துவர்களும், 25,000 சிறப்பு மருத்துவர்களும் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தது.
இருந்தாலும், 1953 மக்களுக்கு ஒரே ஒரு மருத்தவர் என்ற கணக்கில் தான் இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது . ஆனால், உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர்கள் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருந்தது. இதை மனதில் வைத்துதான், புது மருத்துவக் கல்லூரியை நிறுவும் பணிகளை மத்திய அரசும், மாநில அரசும் முன்முனைப்பில் ஈடுபட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.