தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொ.ம.தே.க, மக்கள் விடுதலைக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கும் 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசிகவும் இடதுசாரிகளும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மதிமுக வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும் மமகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விரு கட்சிகளும் தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அதே நேரத்தில், கொ.ம.தே.க, மக்கள் விடுதலை கட்சிக்கு 3 இடங்களும், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 இடமும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில், மதிமுக சாத்தூர், கோவை வடக்கு, வாசுதேவநல்லூர், பல்லடம், மதுராந்தகம், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் 3 இடங்களை பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அறிவித்துள்ளது. அதே போல, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆதி தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.