தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம். அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசியதாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேச துரோக குற்றம் (124 ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சாந்தி கடந்த 5 ஆம் தேதி, அளித்த தீர்ப்பில், வைகோவுக்கு எதிரான குற்றசாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி எனவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகோவின் நிலைப்பாடும், அவரது பேச்சும் பொதுமக்களின் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்கும். அந்த தாக்கத்தின் விளைவு நிச்சயமாக மக்கள் மத்தியில் உருவாகும். வைகோவின் பேச்சு மற்றும் கடிதங்கள் தொடர்பான இந்த புத்தகம் வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்துள்ளார். இதனால் பதட்டமான சூழ்நிலையில் மாநிலத்தில் உள்ள மக்களின் மனநிலையும் இருந்துள்ளது.
சட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் போக்கு, வன்முறையை தூண்டுவது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துவது அல்லது தகராறை தூண்டுதல் ஆகியவற்றை இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124ஏ (தேச துரோக குற்றம்) அடிப்படையில் வருகிறது. இவற்றின் அடிப்படையில் செயல்படும் எவரின் செயல்பாடும் இந்த பிரிவில் தண்டனைக்குரியதுதான். ஆனால் அவரின் செயல் வன்முறையில் விளைவித்ததா இல்லையா என்பது அவசியம் இல்லை. எனவே வைகோ மீதான தேச துரோக வழக்கு நிரூபணமாகிறது. எனவே ஒரு வருட சிறைதண்டனை, 10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,
தனக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பாகவும், போதுமான ஆராதங்கள் இல்லாத நிலையிலும், சட்டவிரோதமாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
தேச துரோக குற்றச்சாட்டுகளுக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் யூகங்களின் அடிப்படையிலேயே நான் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ளேன். தந்தை பெரியாரை கேட்டது போல அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என கேட்டிருந்த நிலையில், குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பின்னர் அந்த பத்தியை நீக்கியுள்ளார். தீர்ப்பு எழுதிய பின் அதை திருத்திய நீதிபதியின் இந்த செயல்பாடு குற்ற விசாரணை நடைமுறை சட்டத்திற்கு எதிரானது.
2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருந்தார் என்பதற்கோ, அதனால் தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையில் இருந்தது என்பதற்கோ, மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. ஆனால் நீதிபதி கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையிலும், அனுமானத்தின் அடிப்படையிலும் நீதித்துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட கூடாது. ஆனால் இதுபோன்ற காரணிகள் நீதிபதியின் மனதில் கோலோச்சியதால்தான் குற்றவாளி என கண்டறியப்பட்டு அதனடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளேன் எனவே தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீடு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.