இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்: இது தேச துரோகம் என்றால், இதைத் தொடர்ந்து செய்வேன் - வைகோ அதிரடி

தீர்ப்பை ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைக்கும்படி வைகோ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்தத் தீர்ப்பை ஒருமாதத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

Vaiko Press Meet: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதோடு வைகோவுக்கு ஒரு வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தீர்ப்பை ஒரு மாத காலத்துக்கு ஒத்தி வைக்கும்படி வைகோ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்தத் தீர்ப்பை ஒருமாதத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.

வைகோ மீதான தேசத்துரோக வழக்கு : குற்றவாளி என்று அறிவித்தது நீதிமன்றம்

அப்போது பேசிய அவர், “இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். தமிழீழ விடுதலைக்காகவும், இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததாகவும், இந்திய அரசு உலக நாடுகளிடம் பணம் பெற்று ஆயுதம் வாங்கி ராஜபக்‌ஷேவிடம் கொடுத்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்பதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பகிரங்கமாகக் கடிதமாகக் கொடுத்தோம். இதற்காக 17 முறை அவரை சந்தித்திருக்கிறேன்.

இந்தக் கடிதங்களைத் தொகுத்து ‘ஐ அக்யூஸ்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். இந்த நூல் அண்ணாமலை மன்றத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக என் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. ஆமாம் நான் அப்படித்தான் பேசினேன்.

வைகோ, எம்.பி. ஆக முடியுமா? சிறைத் தண்டனை வழங்கிய வழக்குப் பின்னணி

இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். ஆமாம், ஈழ தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன். அவர்கள் நாதியற்று போக மாட்டார்கள், இளைஞர்களை திரட்டிக் கொண்டு, ஆயுதம் ஏந்தி போராடச் செய்வேன்.

பின்னர் ‘ஐ அக்யூஸ்’ நூல் தமிழில், ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டது. இந்த விழா ’ராணி சீதை’ மன்றத்தில் நடைபெற்றது. இந்நூலை அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட, மறைந்த கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். நான் பிரதமரிடம் கொடுத்த கடிதங்களின் மொத்த தொகுப்பு தான், ‘குற்றம் சாட்டுகிறேன்’ நூல். இது எல்லாருக்கும் தெரியும்.

அதன் பின்னர் என் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்றது. இப்படி பேசினீர்களா என்று நீதிபதி கேட்டார்கள். ஆமாம், நான் பேசினேன். இந்திய ஒருமைப்பாடு சிதைந்து விடக்கூடாது, இந்திய இறையாண்மை சிதைந்து விடக்கூடாது  என்று பேசினேன். இப்படியே நீடித்தால் ஒருமைப்பாடு நீடிக்காது. ஆக ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டும் நல்ல நோக்கத்திற்காக பேசினேன், என்றேன். நான் கூறிய குற்றச்சாட்டுகளைக் கூறி, இதையெல்லாம் நீங்கள் கூறினீர்களா என்றார்கள். ஆமாம் நான் கூறினேன் என்றேன். எதையும் நான் மறுக்கவில்லை.

இது ஒன்றும் தேச துரோகம் கிடையாது. ஒரு இனம், ஈழ தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களை காப்பாற்றும் விடுதலைப் புலிகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்.

வேலூர் சிறையில் இருந்தவாறு, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியது, குற்றமா? என உச்ச நீதிமன்றத்துக்கு மனு தாக்கல் செய்தேன். ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல, என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

இன்றைக்கு இந்த வழக்கில் தீர்ப்பு நாள். நீதிபதி அவர்கள், நீங்கள் குற்றவாளி என்று நான் தீர்ப்பளிக்கிறேன். தண்டனை குறித்து எதும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். தண்டனையை சீக்கிரம் அறிவித்து விட்டால் நல்லது என சொன்னேன். ஒரு வருட சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் என்று நீதிபதி சொன்னார். தீர்ப்பை வாங்கி வாசித்துப் பார்த்தோம். வழக்கறிஞர்கள் நன்மாறனும், தேவதாஸும் அதைப் பார்த்தார்கள். அதில் குறைந்த தண்டனை வழங்க வேண்டுமென்று குற்றம்சாட்டப்பட்ட நான், (வைகோ) கேட்டுக் கொண்டதாக நீதிபதி எழுதியிருந்தார். என் தலையில் இடி விழுந்ததைப் போல் இருந்தது. நான் நீதிபதியிடம் கேட்டேன். நான் தண்டனையை குறைக்க சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை. அதிக பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கொடுங்கள் ஏற்றுக் கொள்வேன் என்றேன்.

குறைந்த பட்ச தண்டனை கொடுங்கள் என நான் சொல்லாத வார்த்தையை தீர்ப்பில் எழுதியிருக்கிறார் என்றால், நீதிபதியின் உள்ளத்தில் விஷம் இருக்கிறது. நீதிபதியின் உள்ளத்தில் விஷமும், நஞ்சும் இல்லை என்றால் இந்த வார்த்தையை எழுதியிருக்க முடியாது என்று 2 முறை கூறினேன். அதிக பட்ச தண்டனையாக எது வேண்டுமானாலும் கொடுங்கள். தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிக் கொண்டு தான் இருப்பேன்.

இளைஞர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்தை விதைத்ததற்காக எனக்கு இந்த தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள். விதைப்பேன், விதைத்துக் கொண்டு தான் இருப்பேன். நான் தந்தை பெரியார் வழி வந்தவன். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், தந்தை பெரியார் சென்னை சிறையில் 3 ஆண்டுகள் இருந்தார். அதிக பட்ச தண்டனை என்ன இருக்கிறதோ, அதைக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, சால்வையை தூக்கிப் போட்டுக் கொண்டு 3 வருடம் சிறையில் கழித்தார் என படித்திருக்கிறேன். நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

1938-ல் பெரியார் சொன்னார், இன்றைக்கு பெரியார் பேரன் வைகோ சொல்கிறேன், எனக்கு அதிகபட்ச தண்டனையைக் கொடுங்கள். நான் செய்தது தேச துரோகமல்ல, இது தேச துரோகம் என்றால், இதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close