ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக சென்னை சென்று இருப்பதாகவும் அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர். வெற்றிவேலின் இல்லத் திருமண விழா இன்று நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி எம்.டி.எம் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.
இந்நிலையில் துரை வைகோ மட்டும் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தத் திருமண விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், முன்னாள் குமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், மற்றும் பல்வேறு கட்சியினர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் திருமண விழாவில் துரை வைகோ பேசுகையில், ”வைகோ அவர்களுக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் இல்ல திருமண விழாவில் தனது தந்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. அதற்காக நேற்று தயாராகிய போது கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் திடீரென வழுக்கி விழுந்தார். இதில் தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சிகிச்சைக்காக புறப்பட்டுவிட்டார். இதனால் வர இயலவில்லை,” என்று கூறினார்.
வைகோ காயமடைந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் ம.தி.மு.க தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
த.இ.தாகூர்., கன்னியாகுமரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“