மதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’

மதிமுக முப்பெரும் விழாவில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம் என முதல் தீர்மானம் கூறுகிறது.

மதிமுக முப்பெரும் விழாவில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம் என முதல் தீர்மானம் கூறுகிறது.

அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகியவற்றை கொண்டாடும் வகையில் மதிமுக முப்பெரும் விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1: திராவிட இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த கோட்பாடுகளைச் சிதைத்து எப்பாடுபட்டாவது, தமிழ்நாட்டில் கால் ஊன்றி விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் பலவகைகளில் முயற்சித்து வருகின்றது.

கடந்த நான்கரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, அரசியல் சட்ட மரபுகளைக் காலில் போட்டு மிதித்து வருவதுடன், சிறுபான்மை, தலித், பழங்குடி இன மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

மக்கள் ஆட்சித் தத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அ.இ.அ.தி.மு.க., அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என்று இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது.

தீர்மானம் எண். 2 : தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித விழுக்காடு இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 76-ஆம் திருத்தத்தின் மூலம், 9-ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு அளிக்கும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில்‘கிரிமிலேயர்’ கூடாது என்று நாம் வலியுறுத்தி வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் ‘கிரிமிலேயர்’ முறையைக் கொணர வேண்டும் என்றும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 77-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுவதும் ‘சமூக நீதி’க் கொள்கையை முடமாக்கும் முயற்சிகள் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துவதுடன், மத்திய அரசுப் பள்ளிகளில் பிற்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 3: 1964-ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி மாணவராக பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, ஓயாத கடல் அலைகளென, உலகத் தமிழர்களின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பொது வாழ்வில் அரை நூற்றாண்டுக் காலத்தைக் கடந்து இருக்கின்றார்.

1965-இல் மூண்டு எழுந்த மொழி உரிமைப் போர்க்களத்தில் மாணவர் படையின் முன்னோடித் தளகர்த்தராக விளங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரம் மிக்க முன்னணி வீரராக, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் முத்திரை பதித்தார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கு டாக்டர் கலைஞர் அவர்களால் அனுப்பப்பட்டு, 18ஆண்டுகள் டெல்லியில் திராவிட இயக்கத்தின் இலட்சியக் குரலாகத் திகழ்ந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 6 ஆண்டுகள் மக்கள் அவையில் திராவிட இயக்கக் கொள்கைக் கோட்பாடுகளுக்கு ஆக்கம் தேடுகின்ற விதத்தில் பணி ஆற்றினார். ஒட்டுமொத்தமாக, இந்திய நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் தமிழ், இன, மொழி, சமூக, அரசியல் உரிமைகளுக்காக எவ்வித சமரசமும் இன்றி ஓங்கி முழங்கிய பெருமை வைகோ அவர்களுக்கு உண்டு.

கடல்கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

நதிநீர் இணைப்பு, மதுவிலக்கு, சாதி, மத வேறுபாடு – பூசல் நீங்குவதற்காக எனத் தமிழகம் முழுமையும் குறுக்கும் நெடுக்குமாக,ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருமை, தலைவர் வைகோவுக்கு மட்டும்தான் இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைக்காகவும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட ஸ்டெர்லைட் நச்சு ஆலை, நியூட்ரினோ திட்டங்களை எதிர்த்தும், தமிழகத்தைச் சீரழித்து வரும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான வேளாண்மைத் தொழிலைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றார்.

திராவிட இயக்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் இந்தக் காலகட்டத்தில், திராவிட இயக்க எதிரிகளின் நோக்கத்தை முறியடித்து, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கும் கடமையையும், பொறுப்பையும், தனது தோள்மீது சுமந்து கொண்டு இருக்கின்ற, பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு,

ஈரோட்டில் நடைபெறும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா மாநாடு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

பொது வாழ்வில் நூறாண்டு கண்டு, திராவிட இயக்கத்திற்குத் தலைவர் வைகோவின் தூய தொண்டு தொடர வேண்டும் என்று இந்த மாநாடு வாழ்த்துகின்றது.

தீர்மானம் எண் 4 : தமிழ் ஈழத்தில் இன அழிப்புப் போர் நடந்து 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஈழத் தமிழர்களுக்கு உரிய நீதியை சர்வதேச சமூகம் அளிக்கவில்லை என்பது வேதனை தருகின்றது.

2011, ஜூன் 1-ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் எடுத்து உரைத்தவாறு ‘தமிழ் ஈழம் அமைவதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; தமிழ் ஈழத் தாயகத்திலும் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 5: காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய சட்டப் பொறுப்பை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 6: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவிலும், இராசிமணலிலும் தடுப்பு அணைகள் கட்டி, தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடக மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றது. கர்நாடக அரசு தற்போது மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் வனத்துறை ஆகியவற்றிற்கு செயல்திட்ட அறிக்கை மற்றும் கோரிக்கையை அனுப்பி இருக்கிறது.

கர்நாடகம் அனுப்பிய கோரிக்கை மனுவை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடகத்தின் செயல்திட்ட அறிக்கையை தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்க முடிவு செய்து இருப்பது தமிழ்நாட்டிற்குத் திட்டமிட்டு இழைக்கப்படும் வஞ்சகம் ஆகும். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த அநீதியை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்வதுடன், கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 7: மத்திய அரசு தயாரித்துள்ள அணைப் பாதுகாப்பு மசோதாவில் ‘அந்தந்த மாநிலத்துக்குள் இருக்கும் அணைகள் பராமரிப்பு, இயக்குதல் அதிகாரம் அந்தந்த மாநிலத்துக்குத்தான் உண்டு’ என்று கூறப்பட்டு உள்ளது.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் தமிழக அரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணைகளின் கட்டுப்பாடு தேசிய அணைப் பாதுகாப்பு நிறுவனத்திற்கு அளிக்கப்படும் என்பது, மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகும். தமிழக அரசின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ளாமல், அணைப் பாதுகாப்பு மசோதா, 2018 சட்டவடிவம் பெறுவதற்கு கடந்த ஜூலை 13, 2018-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கின்றது.

ஜூன் 26, 2018-இல் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று அணைப் பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 8: மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள மாநிலம் கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக அரசு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சட்டபூர்வமாக நிலைநாட்டப்பட்ட உரிமையை இழந்து விடாமல், உச்ச நீதிமன்ற வழக்கை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 9: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, மத்திய அரசு காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 10: தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் கவனத்திற்குத் தெரிவிக்காமல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் ஆகும். மாநில அரசை மதிக்காத மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை, வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக அரசு எந்தவிதமான நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 11: தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துப் பணிகளைத் தொடங்கினால், மக்கள் அறப்போர்க் கிளர்ச்சி வெடிக்கும் என இந்த மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் எண் 12: எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளைத் தொடருவதற்கு தமிழக அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம் என்று ‘கெயில்’ நிறுவனத்தின் தென் மண்டலச் செயல் இயக்குநர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விவசாயிகளின் கொந்தளிப்பைப் புரிந்து கொண்டு, ஏழு மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் ‘கெயில்’ நிறுவனத்தின் திட்டத்திற்குத் துணை போகக் கூடாது; தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு கொண்டு செல்ல ‘கெயில்’நிறுவனத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 13: கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்று பணிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 14: சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தைத் தமிழக அரசு வலிந்து செயற்படுத்த முனைவதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கண்டனம் தெரிவிப்பதுடன், மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளித்து இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மூன்று வழித்தடங்களை விரிவுபடுத்தத் திட்டமிட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 15: மணல் கொள்ளையை அறவே ஒழித்துக் கட்டி, செயற்கை மணல், ‘எம் சாண்ட்’ உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகளைப் பரவலாக்கிடவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க அயல்நாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கு ஊக்கம் அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 16: அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் கோட்பாட்டுக்கும், அ.இ.அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அ.இ.அ.தி.மு.க., அரசின் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, ‘அடக்குமுறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அதனைக் கைவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 17: தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுவதால், ஆட்சியில் நீடிக்கும் தார்மீக அருகதையை இந்த அரசு இழந்து விட்டது.

ஊழலை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘லோக் ஆயுக்தா’ சட்டம் ஒப்புக்காகக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் விசாரணை நடத்துவதற்கும், அரசு ஒப்பந்தப் பணிகளில் நடைபெறும் ஊழல்களை விசாரிப்பதற்கும் ஏற்ற வகையில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 18: உள்ளாட்சி நிர்வாகத்தைத் திட்டமிட்டுச் சீரழித்து வரும் அ.இ.அ.தி.மு.க., அரசுக்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவிப்பதுடன்,உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு ஆணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 19: ‘ஒக்கி’ புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்குத் தகுந்த மறுவாழ்வுத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிங்களக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடரும் நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிராக கொடிய சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து இருக்கின்றது. இச்சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய எச்சரிக்கை செய்து, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 20: 2016, மே மாதம் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்றபோது ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், அ,இ.அ.தி.மு.க., அரசோ ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் அவரது வாக்குறுதியைச் செயற்படுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டைச் சீரழித்து வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டங்களில் இறங்குவது நாள்தோறும் செய்தி ஆகிவிட்டன.

சாலை விபத்துக்கள், சட்டம்-ஒழுங்கு சீர்க்குலைவு மற்றும் சமூக சீரழிவுக்குக் காரணமாக உள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைத் செயற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 21: மத்திய அரசு மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் சக்திதான் வலிமை மிக்கது என்பதை உணர வேண்டும். இல்லையேல் இந்நாட்டு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் எண் 22: மத்திய அரசு மாநிலங்களின் நிதி உரிமைகளையும், நிதிச் சுதந்திரத்தையும் தட்டிப் பறிக்க முயலக் கூடாது.

மத்திய அரசின் முகவர் போன்று மாநில ஆளுநர் அரசியல் சட்ட மரபுகளை மீறி ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவது, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது; இத்தகைய நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 23: கடந்த 4 ஆண்டு காலமாகப் பொருளாதாரத் தேக்க நிலை, தொழில்துறை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, பொட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்புக்கு வழி செய்யாத திட்டங்கள், பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான செயல்பாடுகள் ஆகியவற்றால் நாட்டைப் பாழ்படுத்தி வரும் பா.ஜ.க. அரசை வீழ்த்த மக்கள் ஆயத்தமாக வேண்டுமென என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.

தீர்மானம் எண் 24: நாட்டின் பன்முகத் தன்மையைத் தகர்க்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு முயற்சிகளுக்கு இம்மாநாடு, வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 25: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 26: ‘ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை, பா.ஜ.க. அரசு கைவிட வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 27: தொழில்துறை வீழ்ச்சி குறித்து அ.இ.அ.தி.மு.க., அரசு அக்கறை இல்லாமல் அலட்சியம் காட்டுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், தொழில்துறை சீரமைப்புக்குத் தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 28: பணி ஆணைகள் (Job Order) மீதான 18 % ஜி.எஸ்.டி.,யை நீக்குவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 29: கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

அத்துடன் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து வெளிவரும் நீரால், ஏழு குளம் பாசனம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஏழு குளங்கள் கடந்து உப்பாறு அணைக்கும் நீர்வரத்து இருந்தது. கேரள மழையின் காரணமாக ஆனைமலையாறு-நல்லாறு நீரானது விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது குளங்களைத் தூர்வாரி நீர் ஆதாரத்தை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 30: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காகத் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டமாக இத்திட்டம் அமையும் என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பல்வேறு அரசியல் காரணங்களால் காலதாமதம் ஆகி வருகின்றது. இத்திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 31:

அமராவதி நதியின் நீர் ஆதாரமாக விளங்கும் பாம்பாறு நதியில் மறையூர் அருகே கேரள அரசு தடுப்பு அணை கட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண் 32: மத்திய அரசும், மாநில அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து, தென்னை நாரில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் தென்னை உற்பத்திப் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண் 33:

அண்மையில் கடும் மழைப் பொழிவில் சிக்கி ஆற்றொணாத் துயரில் உள்ள கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருள் உதவிகளைச் செய்தது. ஆனால்,பெருமழைக்குப் பின் பிளாஸ்டிக் கழிவுகளையும், மருத்துவக் கழிவுகளையும் மிக அதிக அளவில் கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டப்படுகின்றது. தமிழக அரசு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 34: தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனங்களால் தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் உழவர்களின் விளைநிலங்களின் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டங்களை புதை வடங்களாக மாற்றி (கேபிள்கள்) உழவர்களைப் பாதிக்காத வகையில் மத்திய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக மாற்று வழியில் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என இந்த மாநாடு மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 35: கோவை மாவட்டம் ஆணைக்கட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாளியூர், செம்மேடு மத்தியபாளையம், தீத்திப்பாளையம்,எட்டிமடை, வால்பாறை மற்றும் சிறுமுகை போன்ற வனப்பகுதி அருகில் உள்ள கிராமங்களில், காட்டு யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் ஆடு மாடுகளைத் தாக்கியும், பயிர்களை அழித்தும் சேதம் செய்கின்றன. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

எனவே, வனத்துறையில் போதுமான ஊழியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு நவீன கருவிகள் வழங்கிட வேண்டும். வன விலங்குகள் தாக்குதல் தொடராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகின்றது. மேற்கண்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close