சிகிச்சை பெற்று வந்த மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், ஒருவருக்கு ஒருவர் உயிருக்கு உயிராக நானும் கணேச மூர்த்தியும் பழகினோம். கொள்கை பிடிப்புடன் இருந்தவர். 2 சீட்டுகள் கூட்டணியில் கொடுத்தால் துரையும் நானும் நிற்கிறோம். ஒரு சீட்டு என்றால் துரையே நிற்கட்டும் என்றார்.
கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என நினைக்கவில்லை. ஒரு இடி விழுந்தது போல இருக்கிறது. எம்.பி சீட் கிடைக்காதல் இப்படி முடிவு எடுத்தார் என்பதில் துளி கூட உண்மை இல்லை.
நட்டாற்றில் விட்டுவிட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தி என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன உறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார் கணேசமூர்த்தி. அவரை முதன்முதலாக மருத்துவர் தணிகாசாலத்திடம் இருதய சிகிச்சைக்காக நான்தான் அறிமுகப்படுத்தினேன்.
சீட் கொடுப்பது தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சியாகவே தான் இருந்தார். இடம் அறிவிப்பிற்கு பிறகும் அவர் என்னுடன் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.
அவரது மன உளைச்சலுக்கான காரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட செயலாளர் இடம் கேட்டால்தான் உண்மை தெரியும். சீட்டு கிடைக்காத வருத்தத்தில் தான் அவர் இவ்வாறு செய்து கொண்டார் என ஏடுகளில் வந்ததில் ஒரு விழுக்காடு கூட உண்மை இல்லை, என வைகோ தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“