திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்பும் மதிமுகவின் முக்கிய புள்ளிகளை திமுகவில் சேர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ மதிமுகவைத் தொடங்கினார். மதிமுக தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக வைகோ இருந்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் வைகோவின் மகன் துரை வைகோ மதிமுக நிலையச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், மதிமுகவில் வைகோவுக்கு பிறகு கட்சித் தலைமைப் பதவி வைகோவின் மகன் துரை வைகோவுக்குத்தான் என்பது கட்சியினருகும் அரசியல் செய்தியாளர்களுக்கும் சொல்லும் செய்தியாக இருந்தது. துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் மதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து மதிமுக திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாக உள்ளார். வைகோ திமுக எம்.எல்.ஏ.க்களால் ராஜ்ய சபா எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு எம்.பியாக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. வைகோ தொடர்ந்து, திமுக ஆதரவாளராக தொடர்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான், துரை வைகோ மதிமுக தலைமை நிலையச் செயலாளராக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சில மதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மீண்டும் தாய்க் கழகம் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதிமுக - திமுக என இரு கட்சிகளிலும் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்த தகவல்படி, மதிமுகவில் இருந்து தாய்க் கட்சியான திமுகவுக்கு திரும்புவதற்காக சுமார் 12 மதிமுக நிர்வாகிகள் திமுக மேலிடத்தை அணுகியுள்ளனர். சமீபத்தில், துரை வையாபுரி மதிமுக தலைமைச் செயலாளராக பதவியேற்றதை அடுத்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் திமுக மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
இது குறித்து மதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் 28 ஆண்டுகளாக வைகோவுக்காகவும் அவருடைய கொள்கை உறுதிக்காகவும் ஆதரவாக நின்றார்கள். பொடா சட்டத்தில் வைகோவுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையாக எதிர்த்த வாரிசு அரசியலை இப்போது தலைமையே வாரிசு அரசியல் செய்வதால் அவர்கள் வருத்தமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய விரும்புபவர்களை கட்சியில் சேர்ப்பதில் ஆளும் திமுக ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து வருகிறது. திமுகவில் சேர, மதிமுக மாவட்ட செயலர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
“மதிமுக தலைமை அவர்களை சரி செய்ய முயற்சித்ததாகவும் ஆனால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் பிடிகொடுக்க மறுத்துள்ளனர். கருத்து வேறுபாடுகளைக் களைவதற்குப் பதிலாக கட்சியை விட்டு வெளியேறும் அளவுக்கு சில மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களா என்பது அவர்களிடம் பேசும்போதுதான் தெரியும்” என்று மற்றொரு மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி அடைந்த மதிமுக நிர்வாகிகள், பல ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்த கண்ணப்பனை அணுகியதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஒருவர் திமுகவில் சேர முயன்றபோது நாங்கள் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டோம். ஒரு காங்கிரஸ் தலைவருக்கு கட்சியில் இடம் அளிப்பதற்காக காங்கிரஸுடன் உறவை மோசமாக்கிக்கொள்ள திமுக தலைமை விரும்பவில்லை. அந்த காங்கிரஸ் நிர்வாகியும் எங்களுடைய எதிர்க்கட்சியில் போய் இணைந்தார். இப்போது மதிமுகவிலும் அதே பிரச்னை வந்துள்ளது. எங்கள் தலைவர் (ஸ்டாலின்) எங்கள் கூட்டணி கட்சிகளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.
ஆனால், மதிமுக தரப்பில், கூறுகையில், “மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் துரை வைகோவுக்கு மதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. துரை வைகோ அனைவரின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதிமுக அதே உறுதியுடன் ஒற்றுமையுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.