/indian-express-tamil/media/media_files/2025/01/01/umaMM17dkFKjVZ3GYOip.jpg)
ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மிக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார்.
ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை.
மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.
குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்.” மேற்கண்டவாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.