7 பேர் விடுதலை குறித்து இன்று நடைபெற இருக்கும் முற்றுகை போராட்டத்தை தடுக்க முயன்றால் மெரினா போராட்டத்தில் நடந்தது இங்கு நடக்கும் என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தார் வைகோ.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளர் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதம் காடி வருவதாகவும், அவர்கள் விடுதலை குறித்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்றும் மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார். மேலும் ஆளுநரின் இந்த தாமதத்தை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை நோக்கி அவர் தலைமையில், எதிர்கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.
வைகோ பேட்டி
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கவர்நர் தமிழ்நாட்டில் இருக்க கூடாது. 7 பேர் விடுதலை குறித்து உடனடி தீர்வு தேவை. இதற்காக தான் இந்த போராட்டம். இந்த போராட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முழு ஆதரவு தருவதாக தெரிவித்திருக்கிறார்.
அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், குறிப்பாக திராவிடர் கழகம் என 70 அமைப்புகள் இதில் கலந்துக் கொள்கின்றனர்.
போலீசுக்கு சொல்லி விடுகிறேன், நாங்கள் திட்டமிட்டிருக்கும்படி, போராட்டம் நடக்க இருக்கும் இலக்கு வரை தொட விட்டால் ஒன்றும் நடக்காது. ஆனால் ரோட்டுக்கே வரவிடாமல் தடுத்தால், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும். இது என் எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.