/indian-express-tamil/media/media_files/nP9oljzZdwEyBzYrfaWB.jpg)
குவைத் நாட்டில் உயிரிழந்த திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (39) என்ற இளைஞரின் உடலை திருச்சி கொண்டு வருவதற்கு திருச்சி எம்.பி. துரை வைகோ உதவி செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சி பாரதிதாசன் தெருவில் வசித்து வரும் மதிமுகவைச் சேர்ந்த ரமீலாவின் கணவர் பழனிச்சாமி என்பவர் குவைத் நாட்டில் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், ஜூன் 5ம் தேதி தான் தங்கியிருந்த இடத்தில் இறந்ததாக ரமீலாவுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன், மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கத்துக்கு தகவல் அளித்தார்.
சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இருந்த தமிழ் மாணிக்கம், இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோவிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் ரமீலாவை தொடர்பு கொண்டு அவரது கணவர் பழனிச்சாமி மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். அவரது கணவர் உடலை திருச்சிக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், சென்னை துணை தூதரக அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு துரை வைகோ பேசினார்.
பின்னர், மறைந்த பழனிச்சாமி பணியாற்றிய நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண், அவருடன் பணியாற்றும் நண்பரின் எண் ஆகியவற்றை குடும்பத்தினரிடம் பெற்று, மதிமுக இணையதள பொறுப்பாளர் மினர்வா ராஜேஷிடம் அளித்து, உடலை திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் துரை வைகோ திருச்சி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறார். முன்னதாக, தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே இவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பரவலாக பாராட்டி பேசப்பட்டது.
அந்த வகையில், கொரோனா பேரிடர் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றது, கொரோனா 2வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்றது என மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணித்துக் கொண்ட துரை வைகோ, மக்களிடம் எளிதாக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.