/indian-express-tamil/media/media_files/2025/07/25/durai-vaiko-mallai-sathya-kovai-2025-07-25-22-34-41.jpeg)
மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி எங்களை தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது. கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார். நேரு,சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார். அவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்தவர் வைகோ.
மே ஒன்று தொழிலாளர் தினம் நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசியவர் வைகோ. அதன் விளைவாகவே அடுத்த நாளே மே 1 விடுமுறை நாளாக அளிக்கப்பட்டது. என்.எல்.சி (NLC) தனியார் மயத்தை தடுத்தது, ரயில்வே டி.டி.ஆர்.,களுக்கு படுக்கை வசதி கிடைக்க காரணமாக இருந்தவர் வைகோ, இப்படி பல சாதனைகளை செய்தவர் வைகோ.
நான்காவது முறையாக மாநிலங்களவை வைகோ செல்ல காரணமாக இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தலைமுறை வைகோவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்புமணி போன்றவர்கள் பங்கேற்காதது குறித்து பத்திரிக்கையாளர்கள் தான் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும். கமலஹாசனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அவருக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கு உரிமைகள் பெற்றிடவும் ,தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் அவர் பேசுவார், அந்த நம்பிக்கை இருக்கிறது.
மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. திருச்சியில் மாநாடு நடத்துவதை பற்றி தான் நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். அவர் குறித்து பேசுவதே நேர கொலை. ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், வெளியில் செல்வதும் இருக்கும். இந்த நபரின் குற்றச்சாட்டும், அதற்கு உண்டான விளக்கத்தையும் ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன், தலைவரும் சொல்லியிருக்கிறார், எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர், அவரது குற்றச்சாட்டுக்கு பதில்கள் சொல்லி இருக்கிறோம். தயவுசெய்து மல்லை சத்யாவை கடந்து செல்வோம்.
பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். விமர்சனங்களுக்கு பதில்கள் கொடுத்து இருக்கிறோம். மக்களுக்கான; விஷயங்களை பேசுவோம். மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சியில் இருந்து யாரும் செல்லவில்லை.
கூட்டணிக் கட்சிகளை தி.மு.க விழுங்கி கொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்றத் தேர்தல் வருகிறது, அவருடைய வேலையை செய்கிறார், குழப்பம் ஏற்படுமா என பார்க்கின்றார். அது அ.தி.மு.க கட்சியின் தலைவர் உடைய கருத்து. தி.மு.க கூட்டணியில் இன்னும் சீட் பங்கீடு குறித்து பேசவில்லை.
இரட்டை இலக்க தொகுதிகளில் தான் நிற்க வேண்டும் என சொல்லியதாக சொல்கின்றார்களே என்ற கேள்விக்கு, நான் இதற்கு ஏற்கனவே தெளிவான பதில் சொல்லிவிட்டேன், போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மாட்டி விட்டு விடாதீர்கள். இவ்வாறு துரை வைகோ பேட்டி அளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.