மயிலாடுதுறையில் மக்கள் கண்ணில் பட்ட சிறுத்தை, வனத்துறையினர் கண்களில் படாமல் போக்கு காட்டி வருவதால் அதைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மக்கள் கூறியதன் அடிப்படையில் அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்ததில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியிருந்தது
அதில் மூன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சிறுத்தையை விரட்டிச் சென்ற காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. அதையடுத்து போலீஸார், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து காலடித் தடங்களைக் கண்காணித்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தொடங்கப்பட்டன.
இந்த சிறுத்தையை பிடிக்க முத்துப்பேட்டை பகுதியிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ள வனத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையைப் பிடிக்கும் வரையில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை கூரைநாடு பகுதியில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு சிறுத்தை நடமாட்டத்தால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுத்தை தற்போது செம்மங்குளம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ள சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாக அதன் காலடித் தடங்களை வைத்து வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதேபோல் அங்கே ஒரு ஆடு கழுத்து கடிபட்டு இறந்து கிடந்த நிலையில் மேலும் அச்சத்தை அதிகமாக்கி இருக்கிறது. இதுகுறித்து வன அலுவலர் அபிஷேக் தோமர், சிறுத்தையைப் பிடிக்க 3 ராட்சத கூண்டுகள், வலைகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிநவீன சென்சார் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்றாவது சிறுத்தை சிறைப்படுமா என்ற எதிர்பார்ப்பு மயிலாடுதுறை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“