பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 6 லட்சம் வரை கட்டண உயர்வு அறிவிப்புக்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை மேற்கொண்டார். புதுச்சேரியில் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டையே தொடர்கிறார். மருத்துவக்கல்லூரி கட்டண நிர்ணயக்குழு தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கட்டணத்தை ரூ.3.80 லட்சத்திலிருந்து, ரூ.4.80 லட்சமாகவும் தற்போது ரூ.6 லட்சமாக உயர்த்திக்கொள்ள பரிந்துரை அளித்தது.
கொரோனா காலகட்டத்தை கடந்துள்ள மக்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாது என துணை நிலை ஆளுநர், அந்த பரிந்துரையை தாயுள்ளத்தோடு நிராகரித்தார். மருத்துவக்கல்வி கட்டண உயர்வு கோப்புக்கு துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்காததால் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தை, நீதிமன்றத்தை நாடும்படி ஆட்சியாளர்கள் தூண்டிவிட்டுள்ளனர். கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக ஆட்சியாளர்களும், புதுச்சேரி சட்டத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டு சதிச்செயலில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் நயவஞ்சக செயலை புதுச்சேரி அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் கட்டணத்தை உயர்த்த ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் கட்டணத்தை உயர்த்த, நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை புதுச்சேரி அரசு சார்பில் பதிவு செய்ய துணை நிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும். புதுச்சேரி மாநில ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு மருத்துவக்கல்வி எட்டாக்கனியாகி விடக்கூடாது. இதை புதுச்சேரி மாநில அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. கட்சித்தலைமையின் அனுமதி பெற்று தேவையான சட்டநடவடிக்கையை அதிமுக மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“