திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா, கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊதிய தொகையான 3 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து PAYTM மூலம் திருடப்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் பணத்தை திருப்பித்தர வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட வங்கியில் இருந்து பணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரியும், தான் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பவித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் வங்கி தரப்பில், “மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. அவரின் PAYTM கணக்கிலிருந்து காணாமல் போயிருக்கிறது. எனவே, வங்கி இதில் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது” என வாதிடப்பட்டது.
PAYTM தரப்பில், “தங்கள் நிறுவனத்தில் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. வாடிக்கையாளருக்குத் தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில், “PAYTM மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் நாங்கள் தலையிடுவதில்லை” என விளக்கமளிக்கப்பட்டது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப்படும்போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், எந்த தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தை பறிகொடுத்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், PAYTM நிறுவனமும் மாறிமாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
எனவே, இரண்டு வாரங்களில் மாணவி பவித்ராவின் பணத்தை திரும்ப அளிக்க PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“