கடந்த 1986ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தி.மு.க., அதி.மு.க., பா.ம.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரக உதவி தலைமை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் தாக்கல் செய்த அந்த பதில் மனுவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புக்களுக்கு உச்ச நீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழக்கு தொடர்ந்துள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, தற்போதைய நடைமுறையை பின்பற்றியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாநில அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் இதுசம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளும்படி, மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும், வரும் திங்கள் கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Medical courses obc reservation neet exam central government chennai high court admission