மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மருத்துவ மேற்படிப்பில் சேர, தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 2018- 19ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகள், தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என வகைப்படுத்தி, கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஏப்ரல் 23 ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து பிரவின் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் சென்றடைய இயலாத பகுதிகளையே எளிதில் அணுக முடியாத, தொலைதூர பகுதிகளாக அறிவிக்க வேண்டுமே தவிர, குறைந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ள பகுதிகளை அறிவிக்க கூடாது என கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், ஷேசசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை பின்பற்றி பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன... குறிப்பிட்ட காலத்திற்குள் இடங்களை நிரப்பாவிட்டால், அந்த இடங்கள் வீணாகிவிடும். மேலும் மே 8-ந் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்க இருப்பதால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு மருத்துவர்கள் சேவை புரிய வேண்டிய பகுதிகளில் ஊரக பகுதியையும் இணைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு மீண்டும் கிராமப்புற, எளிதில் அணுக முடியாத பகுதிகளை புவியியல் ரீதியாக வகைப்படுத்தும் நிலை ஏற்படும் எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.