சென்னை சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்க, 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுமிக்கு 17 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கைதான 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்தது. ஒருவேளை வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜரானால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், நரம்பியல் மருத்துவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காவல்துறை அனுமதியுடன் சிறப்பு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்க உள்ளது.