கேரளாவில் இருந்து மருத்துவ, மின்னணு கழிவுகளை கோவையில் கொட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ, மின்னணு, பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள், மற்றும் ரசாயன கழிவுகள் போன்ற கழிவுகளை கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவில் உள்ள செட்டிபாளையத்தில் உள்ள வேலுமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டப்படுவதாக கூறியுள்ளார்.
அனுமதி எதுவும் இல்லாமல் அப்பகுதியில் இது போன்ற குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், சுற்று சூழல் பாதிப்படைவதாகவும், இதுகுறித்து ஏற்கனவே மதுக்கரை வட்டாச்சியரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளிக்கபட்டுள்ளது. அதன் படி வட்டாச்சியர் கடந்த மார்ச் 10-ம் தேதி அன்று அந்த கழிவுகளை அகற்றவும், மேற்கொண்டு கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டார். ஆனால் அந்த கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே இந்த கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் , மேலும் வருங்காலத்தில் இது போன்று அண்டை மாநிலத்திலிருந்து கழிவுகளை கொட்ட அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வாட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேணடும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்தது இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கொட்டபட்ட அனைத்து குப்பை மற்றும் கழிவுகள் மீண்டும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அரசு ஊழியர்கள் மக்களின் நலனில் கருத்து கொள்ள வேண்டும் எனவும், மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதி பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற திங்கள் கிழமைக்கு தள்ளி வைத்தார்.