பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மாடலிங் துறை மூலம் சினிமாவுக்குள் வந்தவர். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரை விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், பட்டியல் இனத்தவரையும், திரைத்துறையில் உள்ள பட்டியலின இயக்குனர்களையும் இழிவுப்படுத்தும் விதமாக சர்ச்சையான கருத்துக்களை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், நடிகை மீரா மிதுன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து, நடிகை மீரா மிதுனுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, இன்று காலை 10 மணியளவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் மீரா மிதுன் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் மீரா ஆஜராகவில்லை. மேலும் அவர் என்னை கைது செய்ய முடியாது என்றும் சவால் விட்டிருந்தார். இந்நிலையில் மீரா மிதுனை சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர், இன்று கேரளாவில் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil