இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்

Mekedatu Dam: மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.

Tamil nadu assembly
Tamil nadu assembly

Tamil Nadu Assembly Special Session: இன்று மாலை தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடக்கிறது. மேகதாது அணைப் பிரச்னையில் ஆய்வுக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை வாபஸ் பெற வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் புதிதாக அணை கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக ரூ 5000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஏற்கனவே கர்நாடகாவில் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்திற்கு பாரம்பரியமாக கிடைத்து வந்த நீரின் அளவு குறைந்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. அண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மேற்படி வாரிய அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டக்கூடாது என கூறியது.

இந்தச் சூழலில்தான் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு முன்னோட்டமாக விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டில் பலத்த கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. திருச்சியில் கடந்த 4-ம் தேதி திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலை சந்தித்து சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்ட கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சபாநாயகர் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அரசு பரிந்துரையுடன் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று (டிசம்பர் 6) மாலை 4 மணிக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றக் கூட்ட அரங்கில் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை வாபஸ் பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான தீர்மானத்தை கொண்டு வருவார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசும் வாய்ப்பு இருக்கிறது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே மேகதாது அணைப் பிரச்னையில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mekedatu dam cauvery issue tamil nadu assembly special session

Next Story
எழுத்தாளர்கள் பெருமை கொள்ளும் தருணம்.. மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!சாகித்ய அகாடமி விருது
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X