மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு மனுத்தாக்கல்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.
இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அம்மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி நேற்று முன் தினம் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் டெல்லி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கு தொடரப்பட்ட செய்தி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில், அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.