Advertisment

மேகதாது அணை: காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு வாக்கெடுப்பு நடத்தியதா? விவசாய சங்கத்தினர் போராட்டம்

தமிழ்நாடு அரசின் பிரதிநிதி சந்திப் சக்சேனா வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
PR Pandian .jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் மேகதாது அணைக்கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்ட தீர்மானத்தை  சட்டவிரோதமென அறிவிக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து அலுவலகத்திற்கு வெளியே ஆணைய கூட்டத்தின் தீர்மான நகலை விவசாயிகள் தீயிட்டு கொளுத்த முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாட்டில் காவிரி உரிமையை மீட்பதற்காக 50 ஆண்டு காலம் போராடி இருக்கிறோம். திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் காவிரி உரிமை மீட்பிற்காக போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்று தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது. அதனை தொடர்ந்து விவசாயிகள் சார்பில் காவிரி ரெங்கநாதன் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.  அதனுடைய இறுதி தீர்ப்பு 2007 இல் வெளியிடப்பட்டது. அன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தவறியது காலங்கடத்தியது. 

இதன்பின் 2011ல் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீவிரமாக போராடியதன் விளைவு 2013ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. பின்னர் 2014 ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு விவசாயிகள் ,அரசியல் கட்சிகள் பொதுமக்கள் இணைந்து போராடியதின் விளைவுமீண்டும் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆணையம் அமைக்க மறுப்பதாகவும், அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள தவறுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

WhatsApp Image 2024-02-06 at 15.01.42.jpeg

அதனடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கை தீவிரப்படுத்தி காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய ஆணையமாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் காவிரியின் குறுக்கே உபரி நீரை தடுத்து மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார்.இதனை பெற்றுக் கொண்ட மத்திய அரசு அணை கட்டுவது குறித்த காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட சட்டப்படி வாய்ப்பு இல்லை. எனவே இதனை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். என்று அனுப்பி வைத்தது. 

ஆணையத்தில் அதை ஏற்கக்கூடாது நிராகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். கேரள முதலமைச்சர் சந்தித்து ஆதரவு கேட்ட அடிப்படையில் கேரளாவும் எதிர்த்து வந்தது. தமிழ்நாடு அரசும் விவாதிக்க மறுத்து வந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியதின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்து கருத்துக்களை கேட்கவும், அணை கட்டுவதற்கு ஆதரவான நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசின் பிரதிநிதி சந்திப் சக்சேனா வாக்கெடுப்பு  நடத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அதனை மீறி வாக்கெடுப்பு நடத்தியபோது வெளியேறி தமிழ்நாட்டில் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக சுயநல நோக்கோடு வாக்கெடுப்பில் பங்கேற்று, பெற்ற காவிரி உரிமையை மீண்டும் மேகதாது அணை என்கிற பெயரில் திமுக அரசு பலி கொடுத்துள்ளது. 

இது குறித்து உண்மை நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்துவதோடு, அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவு சட்ட விரோதமென அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டில் மீண்டும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிராகவும் காவிரி விவசாயிகள் நலனை பாதுகாக்கவும் தீவிர போராட்டத்தில் களமிறங்க இருக்கிறோம் என எச்சரிக்கிறேன் என்றார்.  இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.வீரப்பன், மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், கௌரவ தலைவர் திருப்பதி வாண்டையார், வடக்கு மாவட்ட செயலாளர் பாட்ஷாரவி, தஞ்சாவூர் மாநகர தலைவர் காமராஜ், செயலாளர் அறிவு, உயர் மட்டக் குழு உறுப்பினர் கோட்டூர் அசோக், மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளர் சீர்காழி கணேஷ்  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment