தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன்

மேகதாது அணையின் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையல், இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும். இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரிப்படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம்” என்றார்.

இதன்பிறகு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.

அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய போது,  “ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக் கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்பின், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close