/tamil-ie/media/media_files/uploads/2018/12/secretariate.jpg)
தமிழ்நாடு அரசு
Special Session of Tamil Nadu Assembly: மேகதாது அணைப் பிரச்னை குறித்து வியாழக்கிழமை தமிழக சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
மேகதாது அணைப் பிரச்னை, தமிழகத்தில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த அனுமதியை எதிர்த்து இன்று (டிசம்பர் 4) திருச்சியில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. முன்னதாக நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழக சபாநாயகர் தனபாலை சந்தித்து, இந்தப் பிரச்னை தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தக் கோரினர்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக அதிகாரபூர்வமாக சட்டமன்ற செயலகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிசம்பர் 6-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்புக் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு கொடுத்த அனுமதியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.